மாறிவரும் வேலைத்தளங்கள் – விதிகளை மாற்றுகின்றனவா?

மாறிவரும் வேலைத்தளங்கள் – விதிகளை மாற்றுகின்றனவா?
ஜீலை மாத இறுதியில் நாம் அனைவரும் எதிர்பார்த்த மாறிவரும் வேலைத்தளங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை ஒன்ராறியோ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. முன்னர் கனடாவின் தொழிற்தள மையமாக இருந்த ஒரு மாகாணத்தில் மாறிவரும் புதிய தொழில் நிலைகளை வெளிக்காட்டும் ஒரு 320 பக்க ஆய்வாக இது வெளியிடப்பட்டுள்ளது. 25 வீதத்துக்கும் அதிகமான வேலைகள் சிறப்பான ஊதியம் கொண்ட தொழிற்சாலை வேலைத்தளத்தில் இருந்த நிலை மாறி 10 வீதத்துக்கு குறைந்துள்ளது. சேவை வழங்கும் வேலைத்தள வேலைகள் பாரிய வளர்ச்சியை சந்தித்துள்ளன. 13 வீதமான தொழிலாளர்கள் தற்போது தற்காலிக வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் நிறுவனங்களில் 14 வீதமான தொழிலாளர்களுக்கே வேலைத்தளத்தில் தங்களின் உரிமைக்கான குரலை வெளிப்படுத்த தொழிற்சங்கங்கள் உள்ளன. எமது அடுத்த தலைமுறை கல்வியை முடித்து வரும்போது அவர்கள் எந்த மாதிரியான வேலைகளை எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதை நமக்கு நினைவூட்டும் ஒரு அறிக்கையாகவே இது உள்ளது.

கவர்புள்ளிகள்:
தற்போதைய வேலைத்தளங்களில் தொழிலாளர் உரிமைச் சட்டம் மற்றும் தொழில் தரச் சட்டம் ஆகியவற்றின் பங்கை இந்த அறிக்கை ஆய்வு செய்கின்றது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் அனுபவங்கள், தொழிற்சங்கங்களின் அறிக்கைகள் மற்றும் சமூக அமைப்புக்களின் அறிக்கைகளை உற்று நோக்கும்போது இந்த இரு சட்டங்களும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாது எமது பொருளாதாரம் தொழில் நிறுவனங்களினால் சுரண்டப்படுவதற்கு எதிராகவும் ஒரு புதிய பாதை வகுக்கப்பட வேண்டும் என்பதும் தெளிவாகின்றது. இந்த ஆய்வறிக்கையை உருவாக்கியவர்கள் மாற்றத்துக்கான சில வழிவகைகளை கோடிட்டுக் காட்டியிருந்தாலும் தற்போதைய நிலை தக்க வைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர். இது தொழிலாளர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் தடுப்பதற்கும் சட்டத்தை மதிக்காத நிறுவனங்களுக்கு எதிரான எந்த வித விதிமீறல் குற்ற அறிக்கையும் தாக்கல் செய்யப்படாமல் தடுக்கும் வர்த்தக நோக்கத்தை மட்டுமே முன்னிறுத்தும் மனப்பாங்கை காட்டி நிற்கின்றது.

அடுத்தது என்ன?
ஆய்வின் அடுத்த கட்டமாக தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்களிடம் இருந்து இது தொடர்பான கருத்து பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். வர்த்தக சமூகம், லிபரல் அரசிடமிருந்து வேலைத்தளத்தில் மிகக் குறைவான தரத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து பரப்புரைகளையும் செய்யத் தொடங்கி விட்டது. சரியான மாற்றத்தை உருவாக்குவதற்கு தொழிலாளர்கள் உடனடியாக ஒன்று பட வேண்டும்.
இது எமது அடுத்த தலைமுறைக்கான போராட்டம். தற்போதைய நிலை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. எமது குழந்தைகள் குறைந்த ஊதியத்தில் உறுதியற்ற வேலை நிலையில் இருக்க நாங்கள் விரும்புகிறோமா? அல்லது தொழிலாளர் உரிமைகளை மதிக்கும் தரமான வேலைத்தள விதிகள் உருவாக்கப்பட்டு அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோமா? மாறிவரும் வேலைத்தள ஆய்வு அறிக்கை என்பது சட்டம் தொடர்பானதாக இருந்தாலும் இது எமது அடுத்த தலைமுறைகள் இந்தக் கனடிய மண்ணில் வாழும் வாழ்க்கைக்கான சரியான அடித்தளமாகவே நாம் பார்க்க வேண்டும்
மேலதிக விபரங்களுக்கு, network@labourcouncil.ca என்னும் மின்னஞ்சலிலோ 416 441 3663 என்னும் இலக்கத்திலோ எம்மைத் தொடர்பு கொள்ளவும்
ஓக்டோபர் 1ம் திகதி மதியம் 1 மணி அளவில் Queen’s Park இல் நடைபெற இருக்கும் பேரணிக்கு உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்

Posted in Uncategorized | Leave a comment